"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Sunday, November 22, 2015

சோழர் காலத்துக்கோயிலும் சமூகமும்'' நூல் ஆய்வு(கோயிலும் இடையர் சமூகமும்)

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை முதுநிலை விரிவுரையாளராகிய முனைவர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் கோயிற்கலை, பண்பாடு, கல்வெட்டு, நாட்டாரியல் ஆகிய துறைகளில் கொண்டிருந்த ஈடுபாட்டின் பிரதிபலிப்பாக ஐம்பதுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பல ஆய்வுத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்நூலாசிரியரின் ஆய்வு முறையில் தமிழாய்வு, வரலாற்றாய்வு என்பதனை விடவும் சமூகவியல், நாட்டாரியல் ஆய்வுக்கூறுகள் ஆங்காங்கே மேலெழுந்துள்ளன. இத்தகைய துறைகளின் பால் புலமைத்துவம் பெற்றவராகிய முனைவர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் ""சோழர் காலத்துக்கோயிலும் சமூகமும்'' என்னும் நூலைத் தந்துள்ளார்.


கோயில்கள் பற்றிய ஆய்வுகள் நிறைய இதுவரை செய்யப்பட்டுள்ளன ஆயினும் பெரும்பாலும் அவ்வாய்வுகள் கோயில்களை ஒரு சமய நிறுவனம் அல்லது கட்டிடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் நிலைக்களம் என்றே நோக்கியுள்ளன. அதற்கு மாறாக வ. மகேஸ்வரன் கோயிலை ஒரு சமூக நிறுவனம் என்ற நோக்கில் ஆராய்ந்து பல புதிய உண்மைகளை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கோயிலுக்கும் அரசுக்கும் இருந்த தொடர்பு கோயில் நடவடிக்கைகளில் இடையர் மற்றும் பெண்களின் பங்களிப்பு மற்றும் கோயில் நிருவாகத்தில் உள்ளூர் சமூகத்தின் பங்கு ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார் என்று நூலுக்கு அணிந்துரை நல்கிய தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு நிலைப்பேராசிரியர் ஏ.சுப்பராயலு தெரிவித்துள்ளார்.


தமிழ் சமூகத்தில் கோயில் உருவாக்கம், சோழர் காலத்தில் கோயில்கள், கோயிலும் பெண்களும், கோயிலும் இடையர் சமூகமும், கோயிலும் நிருவாக மாற்றங்களும் ஆகிய ஐந்து இயல்களில் தமது ஆய்வினை மேற்கொண்டு இந்நூலை ஆசிரியர் யாத்துள்ளார். காவிரியின் வளமை கொழிக்கும் திருவாரூர், திருவையாறு,திருவிசலூர், வேதாரண்யம், திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளிலிருந்து கல்வெட்டுத் தரவுகளை ஆராய்ந்து சில முடிகளை இந்நூலில் முன்வைத்துள்ளார். தமிழகத்தில் கோயில் கட்டட மரபின் வரலாற்றை இலக்கியத் தரவுகளோடு தொல்லியல் தரும் செய்திகளையும் பயன்படுத்தி நிரல்படச் சொல்லியுள்ளார்.மக்கள் பரவலாகப் போற்றிவந்த கிராமத் தெய்வங்கள், குறிப்பாக பிடாரிபோன்ற பெண் தெய்வங்கள் நாளடைவில் பல்லவ, சோழ அரச குலங்களால் போற்றப்பட்ட பெருந்தெய்வக் கோயில்களால் பின்தள்ளப்பட்டன என்பதையும் இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய நோக்கில் பெருந்தெய்வக்கோயில்களின் அதிகாரமும் செல்வாக்கும் புலப்படுகிறது.தமிழர் சமூகத்தில் கோயில் என்ற அமைப்பின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் என்ற கருத்தியலை முறைப்படுத்துவதாகவே முதலாவது இயல் அமைகின்றது.


வழிபாடுகள் எவ்வெவ் வகையில் உருவாகி வளர்ந்தன என்பதும், கோயில் என்ற அமைப்பு அவ்வழிபாட்டின் தொடர் விளைவாக எவ்வாறு ஏற்பட்டது என்பதும் தொல்லியல் இலக்கியச் சான்றுகளால் விளக்கப்படுகின்றது. இவ்வியலில் பக்தி இயக்கச் செயற்பாடுளால் கோயில் முறைமை வளர்ச்சியடைந்ததும், கோயில் கட்டுமானங்கள் தொடர்பான கருத்து நிலைகள் பெறும் செல்வாக்கும் விவரிக்கப்படுகின்றது.


வரலாற்றுக்காலம் முதல் பல்லவ, பாண்டிய இறுதிக்காலம் வரை வளர்ந்து வந்த கோயில் முறைமை எவ்வாறான பின்புலங்களினூடாக சோழர் காலத்தில் வளர்ச்சி பெற்றதென்பது இரண்டாம் இயலில் ஆராயப்படுகின்றது. தொன்று தொட்டு நிலவி வந்த மரபும், பக்தி இயக்கமும் வளர்த்தெடுத்த பின்புலத்தினூடாக சோழர் காலக்கோயில் கட்டுமானப்பனிகள் அரசகுலத்தவராலும், ஏனையோராலும் எவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டன என்பதும் அதன் ஆரம்ப இடைக்கால வேகமும் பிற்காலத்தில் ஏற்பட்ட தேக்கநிலையும் அதற்கான காரணங்களும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. மேலும் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசுக் கோயில்கள் என்பவற்றின் கருத்தியல் அவற்றின் இயங்குதளம், செயற்பாடுகள் என்பனவற்றிலும் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. இவ்வியலின் இன்னோர் பகுதியாக அக்காலத்தில் நிலவிய கிராமியக் கடவுள் கோயில்கள் பற்றி ஆங்காங்கே தெரியவரும் செய்திகள் தொகுத்து ஆராயப்படுகின்றன.


கோயில் என்ற நிறுவனத்தில் பெண்கள் எல்லாவற்றிலும் கொண்டிருந்த தொடர்புகள் பற்றியதான செய்திகள் மூன்றாம் இயலில் கூறப்பட்டுள்ளது. அரசியல், குறுநிலமன்னர்களது மனைவியர், பிராமணப்பெண்டிர், வேளத்துப்பெண்டிர், வெள்ளாட்டிகள், தேவரடியார் என அவர்களை இனப்பிரித்து இவ்வியலில் ஆராயப்படுகின்றது. இத்தகைய பெண்களது கோயிலுடனான தொடர்பை அரசியல்பலம், அரசியல் உறவு, பொருளாதார பலம், சமூகமேன்மை முதலானவை எவ்வாறு கட்டமைந்தன என்பது பற்றி நோக்குவதாகவும் இவ்வியல் அமைந்துள்ளது. தேவரடியார் சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி என்பன வெட்டுமுகப் பார்வையினடியாக நோக்கப்பட்டு இவர்கள் கலையின் பிரதிநிதிகளாகக் கோயிலினுள் சேர்க்கப்பட்டார்களா, அல்லது அரச நிர்வாகம் அதனைத் தீர்மானித்ததா என்பது பற்றிய நோக்கும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மொத்தக் கோயிற் கொடைகளில் பெண் பரவலும் அதற்கான செயல்முறைக்காரணிகளும் இவ்வியலின் கண் நூலாசிரியரின் தெளிவான பார்வை விழுந்துள்ளமை புலனாகின்றது.


கோயில்களில் அன்றாடம் விளக்கெரிப்பதற்குத் தேவையான நெய்யை வழங்குவதற்கான பண்டமாற்றுச் சேவை ஒன்றை அவர்கள் நிகழ்த்தி வந்துள்ளனர். அவ்வாறான சேவை பற்றியும், அதை நிகழ்த்திய இடையர் சமூகம் பற்றியுமே இவ்வியலில் ஆராயப்படுகின்றது. கோயில்களில் விளக்கேற்றுதல் அத்தியாவசியமான மரபாக வளர்ச்சி பெற்றது. கோயில் கட்டுமானங்கள் நிலையானவையாக உருவானபோது வழிபாட்டின் சின்னமாகவும்,கோயிலின் அக இருளை நீக்கும் கருவியாகவும் இது விளங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இடையர்கள் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்பட்டபோதும் அவர்களின் வாழிடங்கள் பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைத்துள்ளன. எனினும் இடையர் பற்றிய தஞ்சாவூர்க் கல்வெட்டின் மூலம் சோழமண்டலத்தின் பல பகுதிகளிலும் அவர்கள் பரந்து வாழ்ந்த செய்தியினை அறிய முடிகின்றது.


நாகரிக வளர்ச்சி காரணமாகவும் அரசுகளின் தோற்றங்களாலும் அவ்வரசுகளின் சமயஞ்சார்ந்த செயற்பாடுகளினாலும் ஒருங்கிணைந்த அமைப்பாகக் கோயில் என மாறியபோது அது சமூக நிறுவனமாகவும் உருவானது. இவ்வாறான உருமாற்றங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நிறுவனங்களாக இடைக்காலத் தமிழகத்துக் கோயில்கள் விளங்கின. கோயில் நிருவாகிகளைத் தனத்தார் என்று குறிப்பிடும் வழக்கம் சோழர் காலத்தின் இறுதிப்பகுதியிலேதான் ஏற்பட்டுள்ளது. கோயில் நிவந்தங்களுக்கு என்று அமர்த்தப்பட்டவர்கள் பல பணி நிவந்தரக்காரர் ஆவர். தேவர் இடைச்சான்றார் ஆடுகளைப் பெற்று அவற்றிற்காக நெய்யால் விளக்கெரிக்கும் கடமையைச் செய்தனர். பிரõமணக்குழுக்களுக்குப் புறம்மாக வணிகர் முதலான பிறசாதியினரும் கோயிற் நிருவாகப் பணிக்குழுக்களாக இயங்கியதற்கு இவை சான்றுகளாகும்.காலநிதி, வல்லிபுரம் மகேஸ்வரனால் எழுதப்பட்ட இந்த நூல் சமூகம் பற்றிச் செல்லும் நிலைப்பாட்டைப் பார்க்கும்போது சாதிய வித்தியாசங்கள், ஏற்றத்தாழ்வுகள், புறக்கணிப்புக்கள் என்பன இருந்துள்ளமை வெளிப்படை. கோயில் நிர்வாகிகளாகிய தனத்தார் மற்றும் கோயில் பூசகர்களாகிய பிராமணர்கள் மற்றைய சாதிப்பிரிவுகளுக்குள் உள்பட்ட மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்கள் என்பதை இந்நூல் நேரடியாகச் சுட்டிக்காட்டாவிட்டாலும் மறைமுகமாக அவர்களின் தொழில்சார்ந்த முறையில் பின்தள்ளப்பட்டிருப்பதை இயம்பியுள்ளது.சோழர் காலத்தில் மட்டுமல்ல இந்தியõவைப் பொறுத்தளவில் இது நீண்ட தொடராகவே இன்றும் இருந்து வருகின்றது.


இந்நூலை பல ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் பயனுள்ள கருத்தக்கருவூலமாகக்கொண்டு வந்த கலாநிதி வ. மகேஸ்வரனுக்கு சென்னை சேக்கிழார் ஆராய்ச்சிமையம் அண்மையில் சிறந்த நூல் பரிசினை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது. இது அவரது ஆராய்ச்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்பது புலனாகின்றது. ஈழத்து ஆராய்ச்சியாளர்கள் வரிசையிலே இன்றைய காலகட்டத்தில், தமிழ்துறை விரிவுரையாளர் கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் முன்நிற்கிறார்கள்.
க. உயிரவன்
அறிவே ஆண்டவன்
thamilaali@gmail.com

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar