"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, November 28, 2015

முல்லைசார்ந்த கற்பினள்

காலவோட்டத்தில் மலைகளில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அவர்கள் மலையைவிட்டு இறங்கிவந்தனர். அதாவது, மலையடிவாரத்தில் மண்டியிருந்த காட்டுப்பகுதிகளுக்குள் நுழைந்தனர். ஆடுமாடுகளை மேய்த்தலும் சிறு அளவில் உழுதலும் இவர்களுடைய தொழிலாக இருந்தது. இந்நிலங்கள் புன்செய்நிலங்கள்தான். இவர்கள் காடும் காடுசார்ந்த பகுதிகளிலும் குடியிருந்தனர். இந் நிலப்பகுதியை முல்லை என்றனர்.

காட்டுப்பகுதிகளில் வேட்டையாடி, கால்நடைகளை வளர்த்த ஆயர் (ஆ-பசு, நிரை – கூட்டம். ஆநிரையை மேய்த்ததால் இவர்களை ஆயர்கள் என்றனர்.), கோவலர், இடையர், அண்டர், பூழியர், குடவர் ஆகியோர் இனக்குழுமுறையில் இப்பகுதிகளில் வாழ்ந்துவந்தனர். இதற்குச் சான்றாக அகநானூற்றின் 101, 311, 393 ஆகிய பாடல்களைக் காட்டலாம். இவர்களிடம் இனக்குழுச் சமுதாயமான குறிஞ்சி நிலத்தவரின் பண்பாட்டு எச்சங்கள் மிகுந்திருந்தன. இவர்கள் கூட்டுழைப்பினர்கள். கூட்டாகவே உண்டனர். இவர்களின் உணவுப்பொருட்களாக வரகு, கொள், தினை, அவரைப் புழுக்கு போன்றன இருந்தன. சான்று பெரும்பாணாற்றுப்படை – 190 முதல் 196 வரையிலான அடிகள்.

இவர்களின் வாழ்விடப் பகுதியைச் “சீறூர்“ என்று இலக்கியங்கள் சுட்டியுள்ளன. சான்று புறநானூறு – 285 முதல் 335 வரையிலான பாடல்கள். இந்தச் சீறூரினை ஆண்ட மன்னர்கள், இனக்குழுத் தலைமையையும் அரசமைப்பின் தலைமையையும் கொண்ட இருகலப்புநிலைத் தலைமையுடைய ஒருவகையான ஆட்சியினை நடத்தினர். 

இவர்களின் பெருஞ்செல்வம் மாடுகள்தான். அவற்றைக் காக்கவும் அவற்றிலிருந்து பல்வேறு பொருட்களைப் பெற்றுத் தங்களின் உணவுத்தேவைகளைப் போக்கிக்கொள்ளவும் பெரும்பாடுபட்டனர். மாடுகளைத் தம் உடைமையாகக் கருதியதால் இவர்களின் சமுதாயத்தை “உடைமைச்சமுதாயம்“ என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் மாடுகளைப் பகைவர்கள் கைப்பற்றவரும்போது, அவர்களைத் தடுத்து அவர்களிடமிருந்து அவற்றைக் காக்கும்பொருட்டு உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபாடு செய்துள்ளனர். இச்செயலினை அகநானூறு – 67, 131 ஆகிய இரண்டு பாடல்கள் விளக்கியுள்ளன.

ஓர் ஆடவருக்கு ஒரு பெண் என்ற கற்புடை வாழ்க்கை இந்நிலப்பகுதியில் வேரூன்றியது. குறிப்பாக ஒருத்தி ஒருவனுக்காகவே வாழ்ந்தாள் என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் இலக்கியங்கள் “முல்லைசார்ந்த கற்பினள்“ என்று குறிப்பிட்டுள்ளன.

“ஏறுதழுவுதல்“ என்ற மாட்டினை அடக்கும் வீரத்தை ஓர் ஆடவனின் திருமணத்தகுதியாகக் கொண்டனர். இது முல்லைத்திணைக்குரிய வீர விளையாட்டுகளுள் ஒன்றாகப் பிறந்து வளர்ந்தது. இன்றுவரை கொண்டாடப்படும் விழாவாகத் தமிழரிடையே உள்ளது.

குறிஞ்சி நிலத்தில் தலைமையுடையோரின் பெண்கள் சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால், முல்லை நிலத்தில் தலைமையுடையோரின் மனைவி சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இது நாகரிக வளர்ச்சியில் ஒரு பாய்ச்சல். குறிஞ்சி நிலத்தலைவர்களின் பெயர்கள் இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. ஆனால், முல்லை நிலத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பாகவே இலக்கியத்தில் புலப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களும் குறிஞ்சி நிலத் தலைவர்கள்போல வள்ளல் தன்மையுடன் இருந்தாலும் இவர்களின் நிலப்பரப்பில் தொடர்ச்சியான வளம் இல்லை.

1 comment:

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar