"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Tuesday, December 29, 2015

விலங்குகள் காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்கினால் ஜல்லிக்கட்டை நடத்தலாம்: சட்ட நிபுணர்கள் ஆலோசனை

ஜல்லிக்கட்டு
தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது.

கடந்த 2011–ம் ஆண்டு பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு காளையை காட்சிப் பொருளாக பயன்படுத்த தடை விதித்தது.

காளைகள், எருதுகளை துன்புறுத்துவதற்கு உட்படுத்தும் எந்த போட்டியும் நடைபெறாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் விலங்குகள் நலவாரியம் இதை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதுபோல மராட்டியத்தில் எருது வண்டி பந்தயம், பஞ்சாபில் எருது பந்தயம், கர்நாடகாவில் கம்பளா பந்தயம் ஆகியவற்றை நடத்த முடியவில்லை.

தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "ஜல்லிக்கட்டு மற்றும் எருது பந்தயங்களை நடத்த அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 1–ந்தேதி வெளியாகும்" என்றார்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க கூடும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வர தேவை இல்லை. அரசாணையே போதும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு வெளியிட்ட அரசாணை மூலம்தான் 2011–ம் ஆண்டு விலங்குகள் காட்சிப் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. அந்த ஆணையின் காரணமாகவே காளைகளை காட்சிப் பொருளாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமானால் காட்சி பட்டியலில் காளையை சேர்த்து மத்திய அரசு கொண்டு வந்த விதியை நீக்கினால் போதும் என்று கூறப்படுகிறது.

அதாவது எப்படி அரசாணை மூலம் விலங்குகள் காட்சிப் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டதோ, அதே அரசாணை மூலம் காட்சி பட்டியலில் இருந்து காளை, எருதுவை நீக்க முடியும் என்கிறார்கள்.

அவசர சட்டத்தை பயன்படுத்தாமல் ஒரு அரசாணையாலே இதை செய்து விடமுடியும் என்று கருதப்படுவதால்தான் மத்திய மந்திரிகள் அடுத்தடுத்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி உறுதியாக நடைபெறும் என்று நம்பிக்கையோடு கூறி வருகிறார்கள். வரும் 1–ந்தேதி புத்தாண்டு பரிசாக இதை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதற்கு மத்திய அரசு அரசாணையை பயன்படுத்தினால் அதை எதிர்ப்போம் என்று பீட்டா விலங்குகள் நல அமைப்பு கூறியுள்ளது. அந்த அரசாணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

அதுபோல விலங்குகள் நல ஆர்வலர்களும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் வகையில் மத்திய அரசு எந்த அரசாணையையும் திருத்தக்கூடாது என்று கூறியுள்ளது. விலங்குகள் தொடர்பாக எந்த அறிவிப்பு வெளியிடுவதாக இருந்ததாலும் விலங்குகள் நலவாரியத்திடம் முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

காட்சி பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம் என்று விலங்குகள் நலஆர்வலர் நந்திதா கிருஷ்ணா, பீட்டா விலங்குகள் நல அமைப்பு பிரதிநிதி நிகுஞ்ச் சர்மா கூறியுள்ளனர்.

இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் வகையில் மத்திய அரசு எத்தகைய அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar