"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, December 22, 2012

இடைக்காட்டுச் சித்தர்


இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.
இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்

இடைக்காடனார் என்னும் பெயருடன் சங்க காலத்தில் ஒரு புலவர் வேறு. திருவள்ளுவமாலை பாடல்களில் ஒன்றைப் பாடிய இடைக்காடனார் என்பவரும் வேறு. இங்குக் கூறப்படும் இடைக்காடனார் ஒரு சித்தர்.
இடைக்காடு என்பது இவர் வாழ்ந்த ஊர். இந்த ஊர் கேரள மாநிலத்திலுள்ள இடைக்காடு என்றும், மதுரைக்குகுக் கிழக்கில் உள்ள இடைக்காடு என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஆடு, மாடு, அன்னம், மயில், குயில், புல்லாங்குழல், அறிவு, நெஞ்சம், முதலானவற்றை முன்னிறுத்திப் பாடுவதாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன.
  • இவரது பாடல்களிலிருந்து சில தொடர்கள்
சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே – யாவும்
சித்தி என்று நினையேடா தாண்டவக்கோனே – பாடல் 14
தாந் திமித்திமி தந்தக் கோனாரே
தீந் திமித்திமி திந்தக் கோனாரே
ஆனந்தக் கோனாரே – அருள்
ஆனந்தக் கோனாரே
அண்ணாக்கை ஊடே அடைத்தே அமுதுண் – பாடல் 29 (யோகாசன முறை)
பாலில் சுவைபோலும் பழத்தில் மதுப்போலும்
நூலில் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே – பாடல் 50
எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே – பாடல் 56
பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
நாய்நரிகள் போல்அலைந்தால் நன்மைஉண்டோ கல்மனமே – பாடல் 62
இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை
அருள்துறையில் நிறுத்திவிளக்கு ஆக்குகநீ புல்லறிவே – பாடல் 72
கைவிளக்குக் கொண்டு கடலில் வீழ் வார்போலே
மெய்விளக்கு உன் உள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே – பாடல் 74
கற்றூணைப் போல்மனத்தைக் காட்டு மயிலே – வரும்
காலனையும் தூரத்தில் ஓட்டுமயிலே – பாடல் 89
அப்புடனே உப்புசேர்ந்து அளவுசரி ஆனதுபோல்
ஒப்புறவே பிரம்முடன் ஒன்றிநில்லு மடவனமே (அன்னமே) –பாடல் 94
மோன நிலையில் முத்திஉண்டாம் என்றே
கானமாய் ஊதுகுழல் - கோனே
கானமாய் ஊதுகுழல் – பாடல் 98
இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே – உன்
குரங்குமன மாடொன்று அடக்கிவிடு கோனே – பாடல் 133

இடைக்காடர் பற்றிய கதைகள்

இவர் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர் வந்து பால் கேட்க, இவர் பால் கறந்து கொடுக்கப், பருகிய சித்தர் மனமகிழ்ந்து, இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால் இவர் சித்தர் ஆனார் என்பர்.
ஒருமுறை நாட்டில் தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போகும் நிலையை அறிந்தார் என்றும் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றித் தவித்த ஆடுமாடுகளைக் காப்பாற்றியதோடு, மழை பெய்வித்துப் பஞ்சத்ததைப் போக்கினார் என்றும் கதை வழங்குகிறது. மேலும் முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். கெடாமல் இருக்கக் கூடிய குறுவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். இடைக்காடர் எதிர்பார்த்த படியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல், பூண்டுகளும் அழிந்தன. எருக்கிலை போன்ற அழியாத தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப் போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர். இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று ஆட்டுப்பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார். உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது. மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப் பார்த்தனர். நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்து சென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார் என்றும் கதைகளில் குறிப்பிடப்படுகிறது.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar